பக்கங்கள்

சனி, 27 அக்டோபர், 2012

பிரியாத நட்பு




பேசி கொள்ள
அலைபேசி இருக்கு

பகிர்ந்துகொள்ள
பேஸ்புக் இருக்கு

பார்த்து உரையாட
ஸ்கைப்பும் உண்டு

ஆனால்
கணினி முன் உட்கார்ந்து
உன்னை தேட மனமில்லை

ஆம்
உன்னை உணரும் உணர்வு
எனக்கு அது  தரவில்லை

உன் கை பிடித்து,
தோல் உரசும் ஸ்பரிசம்
எனக்கு வரவில்லை

அறியாத வயதில்
செய்த குறும்புகள்
நெஞ்சில் வந்தாலும்
அருகில் நீ
இல்லாமல் அது
இனிக்கவில்லை

ஒரு முறை
நேரில் வாயேன்
சில நாள்
என்னோடு

நாம் சுற்றி திரிந்த
கோவில், கடைதெரு
மொட்டை மாடி
பேசி முடியாத
ஊர் கதை
விகடன்,
ராஜேஷ் குமார், எஸ்ரா

முடிவில்
முடிவில்லாத
நம்ம ஊர்
அரசியல்


பார்த்து மகிழ்ந்த
தியேட்டர் சினிமா
கொலு, கண்காட்சி,
தோழர் படை
என நிறைய


கடற்கரையில்
கால் நினைத்து
கடந்து வந்த வயதை
உன்னோடு இருந்த
சில நிமிடங்களில்
தொலைத்து விட்டு
சின்னஞ்சிறு பிள்ளையாய்
மாறிவிடும் கோலமது

கடலை வாங்கி
மணலில் அமர்ந்து
சொந்த கதை பேசி
சோகத்தை குறைத்து
நிம்மதியை பெற்று

ஆட்டோவில் பேரம் பேசி
பின் பஸ் ஏறி
நேரத்துடன் போவதாக
நினைத்து,
தாமதமாகவே
வீடு சேர்வோம்

நல்ல வேலை வேண்டும்
வாழ்க்கை வேண்டும்
என்று வரம் கேட்ட நான்
பிரியாத நட்பு
வேண்டும் என்று
கேட்கவில்லையோ

                                                 .... பூங்குழலி

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மானம் இழந்து


மானம் இழந்து 
வாழ்வது என்பது
இயலாத ஒன்று 

அதற்க்கு

மரணம் பெற்று
மாண்பு கொண்டு
வாழ்வோம் வா
தோழா 

தன்மானம் மடிந்து 
தரணியில் திரிவதை விட 
அவமானமின்றி
அமைதியை தழுவலாம் 

மழலையில்
மண்ணை மறந்தோம்  
இளமையில்
இனத்தை இழந்தோம்

கற்பதில்
மொழியை துறந்தோம்
வளரும்போது
அடையாளத்தை அழித்தோம்

இப்படி

வாழும்போதே
கொஞ்சம் கொஞ்சம்
தமிழினத்தின்
அடையாளத்தை
தொலைத்து  விட்டோம்

இனியேனும்
இனம் வளர 
மண்ணை நேசி 
இயற்க்கையை போற்று 
காதலை புரிந்துகொள் 
கல்வியை பரப்பிவிடு 
பண்பாடு தேடு 
சாதியை புதை 
தமிழச்சியை சேர்த்துகொள் 
தன்மானத்தை இழக்காதே 
இதெல்லாம் முடிய வில்லை 
என்றால் 

வாழாதே 
நீ 
செத்துவிடு 

உனக்கு 
எங்கள் 
வீர வணக்கம்  

மானம் இழந்து 
வாழ்வது இயலாத 
ஒன்று 

அதற்க்கு 
மரணம் பெற்று 
மாண்பு கொண்டு 
வாழ்வாய் தோழா 

                                                                                                       ... பூங்குழலி 



ஆசை மக்களை
மடியிலிட்டு தாலாட்ட
என்ன தவம் செய்தோமா

மழலை செல்வமதை
நெஞ்சில் வைத்து
பாராட்ட தான்
தாயாகி நின்றோமோ

நாம்
தவமின்றி பெற்ற வரமோ
இந்த தாய்மை

முக்தி முக்தி
என தேடும் மனிதம்
தாய்மையில்
ஒவ்வொரு பெண்ணும்
எடுப்பது
மறுபிறவி
உணர்வதில்லை

வாழும்போதே
பிறவிக்கான
சூட்சமத்தை
உணர்ந்தவர்கள்
பெண்கள்

கருணை இல்லாத
உலகில்
கருவறை வைத்தான்
பெண்ணுக்கு இறைவன்

இவளை உணராத கண்ணுக்கு
கருவறையில் தெரியாது  தெய்வம்